கும்மிடிப்பூண்டி அருகே 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சிக்கியது லாரி டிரைவர், கிளனர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சிக்கியது லாரி டிரைவர், கிளனர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2019 3:45 AM IST (Updated: 5 Jan 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் இருந்து கேரளாவுக்கு டேங்கர் லாரியில் கடத்த முயன்ற 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கும்மிடிப்பூண்டி அருகே மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்தனர்.

கும்மிடிப்பூண்டி,

லாரியின் டிரைவர் மற்றும் கிளனரை கைது செய்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரியை சோதனைச்சாவடியில் காத்திருந்த போலீசார் திடீரென மடக்கி பிடித்தனர். இந்த லாரியில் 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ஆந்திரா வழியாக கடத்திச்செல்வது தெரியவந்தது. போலீசார் லாரி டிரைவர் மற்றும் கிளனரை மடக்கி பிடித்தனர்.

மேற்கண்ட எரிசாராயம் கடத்தி வந்த டேங்கர் லாரியை, சோதனைச்சாவடியில் படம் பிடித்த உள்ளூர் போலீசாரின் செல்போனையும் பறித்து அதில் பதிவு செய்யப்பட்ட டேங்கர் லாரியின் புகைப்படத்தை நாமக்கல் மது விலக்கு போலீசார் உடனடியாக அழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட எரிசாராயம் கடத்தி வந்த டேங்கர் லாரியை பறிமுதல் செய்த நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசார், அதன் டிரைவர் மற்றும் கிளனரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட டிரைவர் உள்பட 2 நபர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய டேங்கர் லாரியை உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி மேற்கண்ட சோதனைச்சாவடியில், திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு போலீசாருடன், நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசார் இணைந்து நடத்திய வாகன சோதனையில் ஆந்திரா வழியாக சென்னை நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியில் 338 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த 11 ஆயிரத்து 830 லிட்டர் எரிசாராயம் சிக்கியது என்பதும் லாரியில் வந்த டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story