காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் நுகர்பொருள் வாணிபகழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை


காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் நுகர்பொருள் வாணிபகழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 4 Jan 2019 11:00 PM GMT (Updated: 4 Jan 2019 8:30 PM GMT)

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர், 

திருவாரூர் விளமலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு திருவாரூர் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தொ.மு.ச. மாநில தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வள்ளுவன், ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பழனி, பொதுச்செயலாளர் இளவரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், இணை பொதுச்செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருகிற 8, 9-ந் தேதிகளில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்தும், நுகர் பொருள் வாணிப கழக தொழிலாளர்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விளக்க வாயிற்கூட்டம் நடந்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நவீன அரிசி ஆலை தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தினக்கூலிகளாக பணியாற்றும் 600 துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நவீன அரிசி ஆலைகளில் கொள்முதல் நிலையங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் குமார், பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் கிருஷ்ணராஜ், மாநில பொதுச் செயலாளர் மாறன், டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்க மாநில தலைவர் மதிவாணன், மாநில பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில தலைவர் சங்கரபாண்டியன், மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story