தஞ்சை அரசு பெண்கள் பள்ளியில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக மாணவிகளுக்கு சில்வர் கேன்


தஞ்சை அரசு பெண்கள் பள்ளியில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக மாணவிகளுக்கு சில்வர் கேன்
x
தினத்தந்தி 4 Jan 2019 11:15 PM GMT (Updated: 4 Jan 2019 9:10 PM GMT)

தஞ்சையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக பள்ளி மாணவிகளுக்கு சில்வர் கேன்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்,

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், பாலிதீன் பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தடையை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாநகராட்சி அதிகாரிகளும் இது தொடர்பாக தினமும் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக சில்வர் கேன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் சில்வர் கேன்களை குறைந்த விலையில் வாங்கி கொடுத்து வருகின்றனர்.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு சில்வர் கேன்களை முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தா வழங்கினார். மேலும் இயன்ற அளவுக்கு பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லா மாசற்ற தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதி ஏற்கப்பட்டது.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாக எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக சில்வர் கேன்களை குறைந்த விலையில் வாங்கி மாணவிகளுக்கு வழங்கி வருகிறோம். மொத்தமாக வாங்குவதால் விலையும் குறைவாக உள்ளது” என்றனர்.

Next Story