கோவை ரத்தினபுரியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி


கோவை ரத்தினபுரியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி
x
தினத்தந்தி 4 Jan 2019 10:45 PM GMT (Updated: 2019-01-05T02:52:20+05:30)

ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் பங்குதாரர் கைது செய்யப்பட்டார். 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

கோவை,

கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டில் அம்பாள் சிட்பண்ட்ஸ் என்ற சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனை மகேஸ்வரி என்ற பெண் நடத்தி வந்தார். ஆனந்தகுமார், நாகலட்சுமி, லோகநாதன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தில் ஏராளமானவர்கள் ஏலச்சீட்டு போட்டு வந்தனர். ரத்தினபுரியை சேர்ந்த கண்ணன் என்பவரும் அவர்கள் நடத்திய சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தினார்.

தவணை முடிந்த பின்னரும் ரூ.4½ லட்சத்தை கொடுக்காமல் மகேஸ்வரி உள்பட 4 பேரும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து கண்ணன் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோன்று ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மகேஸ்வரி உள்பட 4 பேரும் பணம் மோசடி செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் சீட்டு நிறுவன பங்குதாரர் லோகநாதன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேஸ்வரி, ஆனந்தகுமார், நாகலட்சுமி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story