சொத்து பிரச்சினையில் பயங்கரம் கோடரியால் தாக்கி முதியவர் கொலை தலைமறைவான மகனுக்கு வலைவீச்சு


சொத்து பிரச்சினையில் பயங்கரம் கோடரியால் தாக்கி முதியவர் கொலை தலைமறைவான மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jan 2019 10:00 PM GMT (Updated: 4 Jan 2019 9:58 PM GMT)

பாகல்கோட்டையில் சொத்து பிரச்சினையில் கோடரியால் தாக்கி முதியவரைகொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாகல்கோட்டை, 

பாகல்கோட்டையில் சொத்து பிரச்சினையில் கோடரியால் தாக்கி முதியவரைகொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முதியவர்கொலை

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே வசித்து வந்தவர் மல்லிகார்ஜுன் (வயது 65), விவசாயி. இவரது மகன் சரணப்பா. இந்த நிலையில், சொத்து பிரச்சினை காரணமாக தந்தை, மகன் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மகனுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பாதாமி புறநகர் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் மல்லிகார்ஜுன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரணப்பா, கோடரியால் தந்தை என்று கூட பார்க்காமல் மல்லிகார்ஜுனை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து சரணப்பா தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

வலைவீச்சு

இதுபற்றி அறிந்ததும் பாதாமி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிகார்ஜுன் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சொத்து பிரச்சினை காரணமாக மல்லிகார்ஜுனை, அவரது மகன் சரணப்பா கோடரியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதாமி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சரணப்பாவை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story