லாரி மோதி 2 கார்கள் சுக்குநூறாக நொறுங்கியது: 3 பெண்கள், டிரைவர் சாவு மும்பை- புனே நெடுஞ்சாலையில் பரிதாபம்


லாரி மோதி 2 கார்கள் சுக்குநூறாக நொறுங்கியது: 3 பெண்கள், டிரைவர் சாவு மும்பை- புனே நெடுஞ்சாலையில் பரிதாபம்
x
தினத்தந்தி 5 Jan 2019 12:00 AM GMT (Updated: 4 Jan 2019 10:04 PM GMT)

மும்பை- புனே நெடுஞ்சாலையில் லாரி மோதி 2 கார்கள் சுக்குநூறானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கார்களில் பயணம் செய்த 3 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

மும்பை, 

மும்பை- புனே நெடுஞ்சாலையில் லாரி மோதி 2 கார்கள் சுக்குநூறானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கார்களில் பயணம் செய்த 3 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

தறிகெட்டு ஓடிய லாரி

புனேயில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று நேற்று காலை மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 11 மணியளவில் அந்த லாரி ராய்காட் மாவட்டம் கோபோலி பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் பாய்ந்த லாரி, அந்த வழியாக புனே நோக்கி சென்று கொண்டிருந்த 2 கார்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

4 பேர் பலி

இதில், ஒரு கார் லாரி மோதி தள்ளிய வேகத்தில் அப்பளம்போல் நொறுங்கி சாலையோரத்தில் உள்ள 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மற்றொரு கார் கவிழ்ந்த லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. விபத்தில் சிக்கிய 2 கார்களும் சுக்குநூறாக நொறுங்கின. இந்த கோர விபத்தில் லாரி டிரைவர் அசன் பட்டேல் மற்றும் கார்களில் பயணம் செய்த பெண்கள் நிகிதா அங்ரே, சித்ரா அங்ரே, பிரணாலி குதுக்கர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

3 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் கோபோலி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீஸ் விசாரணை

பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்தை ஏற்படுத்தி கவிழ்ந்த லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. அந்த லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. மேலும் சாலையில் சிதறி கிடந்த சிமெண்டு மூட்டைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த விபத்தின் காரணமாக மும்பை- புனே நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்குள்ளான லாரியை கிளீனர் ஓட்டிவந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story