மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 2 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு; உஜ்வாலா திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், 84 ஆயிரத்து 94 பயனாளிகள் இலவச சமையல் கியாஸ் இணைப்பு பெற்றுள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மதுரை,
நாடு முழுவதும் 5 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்க பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.12,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், வருகிற மார்ச் மாதத்துக்குள் 5 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னதாகவே அந்த இலக்கை அடைந்து விட்டதால் தற்போது மேலும் 3 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்ட பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம், கடந்த ஆண்டு முதல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டம், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம், காட்டுப்பகுதியில் குடியிருப்பவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை தோட்டத்தொழிலாளர்கள், தேயிலைத்தோட்ட முன்னாள் தொழிலாளர்கள், ஆற்றங்கரைப்பகுதிகளில், தீவுகளில் வசிப்பவர்கள் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது, இந்த பிரிவுகளில் வராத, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரது ஆதார் கார்டு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், கியாஸ் அடுப்பு மற்றும் முதல் கியாஸ் சிலிண்டர் வாங்க பணம் இல்லாதவர்களுக்கு கடனுதவியும் வழங்கப்படுகிறது.
அதன்படி, கியாஸ் அடுப்பு மற்றும் ஒரு சிலிண்டருக்கான பணம், 7–வது சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு கிடைக்கும் மானியத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். மதுரை மாவட்டத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 913 பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 87.52 சதவீதம் பேருக்கு கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் கடனுதவியில் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 112 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 84 ஆயிரத்து 94 பேருக்கும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் வசதிக்காக 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு பதிலாக 5 கிலோ எடையுள்ள சிலிண்டரும் பெற்றுக்கொள்ளலாம். இந்த சிலிண்டர் தற்போதைய நிலவரப்படி, சுமார் 260 ரூபாய்க்கு கிடைக்கும். இதற்காக ரூ.90 வரை மானியமும் கிடைக்கும்.
அதன்படி, தற்போது இலவச இணைப்புகளுடன் மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 47 ஆயிரம் கியாஸ் இணைப்புகளும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 59 ஆயிரத்து 430 இணைப்புகளும், தேனி மாவட்டத்தில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 960 இணைப்புகளும் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் 52 சதவீத வாடிக்கையாளர்களும், பாரத் கியாசில் 25.5 சதவீத வாடிக்கையாளர்களும், எச்.பி. கியாசில் 22.5 சதவீத வாடிக்கையாளர்களும் சமையல் கியாஸ் இணைப்பு வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.