நாகர்கோவில் அருகே பட்டப்பகலில் துணிகரம்: பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை - நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை
பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில் புத்தளம் அருகே மாலையணிந்தான் குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 38). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (35), ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
இவர்களுக்கு தவமதன் (12), பூர்னேஷ் (3½) என்ற 2 மகன்கள் உள்ளனர். பாஸ்கரனுடன் அவருடைய தாயார் பூங்கனியும் (68) தங்கி இருந்தார்.
தினமும் காலை 8 மணிக்கு பாஸ்கரனும், கலைவாணியும் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை இருவரும் கல்லூரிக்கு புறப்பட்டனர். பின்னர் 2 மகன்களும் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டனர். வீட்டில் பூங்கனி மட்டும் தனியாக இருந்தார். அவரும் மதியம் 12.30 மணிக்கு ஒசரவிளை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். தொடர்ந்து 2.30 மணிக்கு மீண்டும் வீடு திரும்பினார். வீட்டின் முன்பகுதி கேட்டை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவர் பாசமாக வளர்த்த நாய் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது.
இதனால் பதற்றம் அடைந்த பூங்கனி வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறைகளில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோக்களும் திறந்து கிடந்தன.
உடனே பூங்கனி, இதுபற்றி தனது மகன் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, பாஸ்கரன், மனைவி கலைவாணியுடன் பதறி அடித்து கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு பீரோக்களில் இருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.47 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு கணவன்- மனைவி அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் ஓரா வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையை பதிவு செய்தனர். மோப்பம் பிடித்த ஓரா, சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பாஸ்கரன் வீட்டை நீண்ட நாட்களாக நோட்டமிட்ட கொள்ளையர்கள் தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பூங்கனி வெளியே சென்றதை கண்காணித்த கொள்ளையர்கள், சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது அங்கு வீட்டின் காவலுக்கு இருந்த நாய் குரைத்துள்ளது. உடனே அங்கு கிடந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தப்படும் கம்பியால் அந்த நாயை அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. பூங்கனி வெளியே சென்று வீடு திரும்பிய 2 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேராசிரியர் தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்துக்கு முன்னதாக மற்றொரு வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பேராசிரியர் தம்பதி வீட்டில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு தேரிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ்(35). இவர் வெள்ளமோடிவிளையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கன்ஸ்லா (33). இவர் வல்லன்குமாரவிளை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். செல்வராஜின் பெற்றோர் அருகில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கன்ஸ்லாவும், மகனும் பள்ளிக்கு சென்று விட்டனர். செல்வராஜ் கல்லூரிக்கு செல்லவில்லை. எனினும் அவர் வீட்டை பூட்டி விட்டு 11.30 மணிக்கு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். 1.30 மணிக்கு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது, அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
மேலும் அதில் இருந்த 5½ பவுன் நகையும் திருடு போய் இருந்தது. இந்த சம்பவத்திலும், பேராசிரியர் தம்பதி வீட்டில் நடந்த கொள்ளையிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா செயல்படாததால் கொள்ளையர்கள் உருவம் சிக்கவில்லை
கொள்ளை நடந்த பேராசிரியர் பாஸ்கரன் வீட்டில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கொள்ளையர்கள் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் கொள்ளையர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை. கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய போது அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டிருந்தது. எனவே கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை. இதுவும் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது என்று போலீசார் தெரிவித்தனர். பாஸ்கரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்ததால் உடனடியாக துப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு, அது ஏமாற்றமாகவே இருந்தது.
பேராசிரியையை நோட்டமிட்ட கொள்ளையர்கள்
கலைவாணி தனது நகைகளை எப்போதும் வங்கி லாக்கரில் வைத்திருப்பது வழக்கம். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கலைவாணியின் தம்பி திருமணம் நடந்தது. இந்த விசேஷ நிகழ்ச்சியில் நகைகள் அணிவதற்காக, வங்கி லாக்கரில் வைத்திருந்த அனைத்து நகைகளையும் கலைவாணி எடுத்துள்ளார்.
பிறகு 80 பவுன் நகைகளுடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து அடுத்தடுத்து சில விசேஷ நிகழ்ச்சியும் வந்ததால் அவர் நகைகளை வங்கி லாக்கரில் வைக்காமல் வீட்டு பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கலைவாணி நகைகளுடன் சுற்றியதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்பதால், அந்த கொள்ளையர்கள் கலைவாணியின் தம்பி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே இந்த கோணத்திலும் போலீசார் துப்பு துலக்க முடிவு செய்துள்ளனர்
Related Tags :
Next Story