சிறுவனைச் சந்தித்த ரஷ்ய அதிபர்


சிறுவனைச் சந்தித்த ரஷ்ய அதிபர்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:59 AM GMT (Updated: 5 Jan 2019 10:59 AM GMT)

ரஷ்யாவில் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுவனை அந்நாட்டு அதிபர் சந்தித்துப் பேசியதுடன், கைகுலுக்கி அவனை மகிழ வைத்தார்.

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஸ்டாவ்ரோபோலில் வசித்துவரும் 10 வயதுச் சிறுவன் கொல்யா குஷ்நட்சோவ். அவனுக்கு தீவிர நோய் பாதிப்பு உள்ளது.

இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டி வந்தது. அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது. சமீபத்தில் இந்த ஆசை நிறைவேறியது.

குறிப்பிட்ட சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்தார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்தார்.

அவனது சம்ேபா போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்துகொள்ளும்போது இந்த ஆடையை அணிந்துகொள்ளலாம் என சிறுவனின் தாய் அவனிடம் உறுதிகூறியுள்ளார்.

தாயுடன் கிரெம்ளின் மாளிகையைச் சுற்றிப் பார்த்த அந்தச் சிறுவன் அங்குள்ள பல அறைகளுக்கும் சென்றுள்ளான்.

ஆண்டிரீவ்ஸ்கை என்ற அறைக்கும் அவன் சென்றுள்ளான். முக்கியத் தலைவர்கள் அங்கு பதவியேற்றுக் கொள்வது வழக்கம்.

இதுபற்றிச் சிறுவன் கூறும்போது, நான் மாஸ்கோ நகருக்கு முதல்முறையாக வந்துள்ளேன். இதில் நான் ஆர்வத்துடன் இருந்தேன். அதிபர் புதின் எனது கைகளை வலிமையுடன் குலுக்கினார். அவருடன் கை குலுக்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளான்.

Next Story