கிராம நிர்வாக அலுவலகம் மூலமாக இலவச வேட்டி– சேலை வழங்கக்கோரி ரே‌ஷன் கடை ஊழியர்கள் போராட்டம்


கிராம நிர்வாக அலுவலகம் மூலமாக இலவச வேட்டி– சேலை வழங்கக்கோரி ரே‌ஷன் கடை ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 8:15 PM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அலுவலகம் மூலமாக இலவச வேட்டி– சேலைகளை வழங்கக்கோரி ரே‌ஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

தமிழக அரசு வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தலா ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பை வினியோகம் செய்வது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைவழங்கினார். அப்போது இதுவரை கிராம நிர்வாக அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்த வேட்டி– சேலைகளையும் ரே‌ஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று குமரி மாவட்டத்தில் அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரே‌ஷன் கடை ஊழியர்கள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட ரே‌ஷன் கடை ஊழியர்கள் 219 பேருக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை கூற வட்ட வழங்கல் அலுவலர் அழைத்து இருந்தார்.

அதன்படி ரே‌ஷன் கடை ஊழியர்கள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள வாகன நிறுத்தத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியம்மாள் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி– சேலைகளையும் ரே‌ஷன் கடைகள் மூலமாகவே வழங்க உணவுப்பொருள் வழங்கல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி ரே‌ஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதற்கு ரே‌ஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது ஏற்கனவே ரே‌ஷன் கடை ஊழியர்கள் அனைவரும் பணிச்சுமையால் அவதிப்பட்டு வரும் நிலையில், இலவச வேட்டி– சேலைகளையும் ரே‌ஷன் கடைகள் மூலமாக வினியோகம் செய்ய சொல்வதை ஏற்க முடியாது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி கூடுதல் பணியாகும். எனவே எங்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், ரூ.1000 யார், யாருக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியலை வட்ட வழங்கல் அலுவலகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கூட்டத்தை நடத்திய வட்ட வழங்கல் அதிகாரி பாண்டியம்மாள், கலெக்டர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட காணொலி காட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு சென்று விட்டார். எனவே சிறிது நேரம் போராட்டம் நடத்திய ரே‌ஷன் கடை ஊழியர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

Next Story