நாட்டறம்பள்ளி அருகே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சென்ற கார் விபத்தில் சிக்கியது ஒருவர் பலி- 4 பேர் படுகாயம்
நாட்டறம்பள்ளி அருகே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சென்ற கார், தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மன்ற நிர்வாகி பலியானார்.
நாட்டறம்பள்ளி,
சென்னையில் ரஜினி மக்கள் மன்ற கூட்டம் நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் தர்மபுரியை சேர்ந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர் (வயது 25), அருள் (22), தமிழ் (24), கார்த்திக் (28), மகேந்திரன் (52) ஆகியோர் ஒரு காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
காரை கார்த்திக் ஓட்டிச்சென்றார். வேலூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் வாணியம்பாடியை கடந்து கார் சென்று கொண்டிருந்தது.
லட்சுமிபுரம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி ஓடி தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மகேந்திரன் இறந்து விட்டார். மற்ற 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story