திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அஞ்சுகிறது டி.டி.வி. தினகரன் பேட்டி


திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அஞ்சுகிறது டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2019 4:45 AM IST (Updated: 6 Jan 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அஞ்சுகிறது என டி.டி.வி.தினகரன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அஞ்சுகிறது. அதற்காகத்தான் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். கூட்டணி கட்சியினரை வைத்து உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகி தேர்தலை நிறுத்த பார்க்கிறார்கள். ஏற்கனவே தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டரின் அறிக்கையை பெற்று தான் தேர்தலை அறிவித்திருக்கும். இந்த நிலையில் மீண்டும் மாவட்ட கலெக்டர், அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இடைத்தேர்தல் வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் மக்கள் தேர்தலை வேண்டாம் என கூறவில்லை. மக்கள் கூறியிருந்தால் தள்ளி வைக்கலாம்.

 காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்காமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவதில் சூழ்ச்சி உள்ளது என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் மேல் முறையீடு செய்ய ஜனவரி 25–ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவு குறித்து தி.மு.க.வின் சரவணன் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் உள்ளதால் அங்கு தேர்தலை நடத்த முடியாத நிலை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.


தன்னை பலம் வாய்ந்த கட்சி என கூறிக்கொள்ளும் தி.மு.க. வேண்டுமானால் அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு அங்கு தேர்தல் நடத்த வழிவகை செய்யலாமே. ஆனால் அதை செய்யாமல் கபட நாடகம் ஆடுகிறது. அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் தேடிக்கொண்டிருக்கின்றனர். அதனால்தான் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்க காலதாமதம் ஏற்படுகிறது. சட்டப்படி குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும்.

திருவாரூர் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தற்போதைய ஆட்சியாளர்களும், முன்பு ஆட்சி செய்தவர்களும் காணாமல் போவார்கள். பணத்தால் மக்களை விலைக்கு வாங்க முடியாது. அப்படி விலைக்கு வாங்க முடியும் என்றால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ரெங்கசாமி, அமைப்பு செயலாளர் சிவாராஜமாணிக்கம், திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான எஸ்.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story