தடை நீக்கம்: சமயபுரத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்


தடை நீக்கம்: சமயபுரத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:45 PM GMT (Updated: 5 Jan 2019 9:06 PM GMT)

தடை நீங்கியதை தொடர்ந்து சமயபுரத்தில் ஆட்டுச்சந்தை களை கட்டியது. ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

சமயபுரம்,

சமயபுரம் ஒத்தக்கடையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ஆத்தூர், சேலம், கெங்கவல்லி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இதனால் ஏராளமான ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படும்.

இந்நிலையில் கோமாரி நோய் தாக்குதல் காரணமாக சமயபுரம், மணப்பாறை உள்பட ஒவ்வொரு வாரமும் கூடும் ஆடு மற்றும் மாட்டுச் சந்தைகளில் நான்கு வாரங்களுக்கு ஆடு, மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 3 வாரங்களாக ஆட்டுச்சந்தை நடைபெறவில்லை. ஆனால் இதை அறியாமல் சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்த வியாபாரிகள், சந்தை நடைபெறாததை தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சந்தைகள் செயல்படுவதற்கு அனுமதியளித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று சமயபுரம் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆடுகளை வேன், லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வியாபாரிகள் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகளை போட்டி போட்டு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கிச்சென்றனர். இதனால் சந்தை களை கட்டியது. 3 வாரங்களாக நடைபெறாமல் இருந்த சந்தை நேற்று நடைபெற்றதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். சந்தையின் காரணமாக அப்பகுதியில் தற்காலிக டீக்கடை, தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டிருந்தன. 

Next Story