சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் ஐதராபாத் பயணம்


சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் ஐதராபாத் பயணம்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 6 Jan 2019 10:13 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் 9-ந் தேதி ஐதராபாத் செல்கின்றனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

பருவ மழை பொய்த்து போனதால் ஏரிகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று காலை 6 மணியளவில் 4 ஏரிகளில் 1.324 டி.எம்.சி. தண்ணீீர்தான் இருப்பில் உள்ளது.

இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் 35 நாட்கள்தான் குடிநீர் வினியோகம் செய்யமுடியும். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1.778 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது. கண்டலேறு அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் 2-வது தவணையாக தண்ணீர் திறப்பு தாமதமானது. ஜூலை மாதத்துக்கு பதிலாக செப்டம்பர் மாதம் 22-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அக்டோபர் 28-ந் தேதி கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் 1.604 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது.

இந்த நிலையில் பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி வலியுறுத்த தமிழக பொதுப்பணித்துறை அதி கரிகள் வரும் 9-ந் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்ல உள்ளனர். அங்கு கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 20.82 அடியாக பதிவானது. வெறும் 329 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர்வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

Next Story