திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் ஜான்பாண்டியன் பேட்டி


திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் ஜான்பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2019 11:00 PM GMT (Updated: 6 Jan 2019 5:05 PM GMT)

திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திருவாரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.

திருவாரூர்,


திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்து பல்வேறு விதமாக உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து நாளை (இன்று) தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கப்படும்.


மேலும் எங்கள் கட்சியை இதுவரை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. எங்கள் கட்சி தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தால் பல்வேறு நிவாரண பணிகள் பாதிக்கப்படும். எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story