கிண்டி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர், கொலை செய்யப்பட்டது அம்பலம் காதல் தகராறு காரணமா? போலீஸ் விசாரணை


கிண்டி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர், கொலை செய்யப்பட்டது அம்பலம் காதல் தகராறு காரணமா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 Jan 2019 3:15 AM IST (Updated: 7 Jan 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

கிண்டி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர், கொலை செய்யப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கிண்டி-பரங்கிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் கடந்த 1-ந் தேதி அதிகாலையில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பரங்கிமலை ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் மாம்பலம் ரெயில்வே போலீசார், அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்பது தெரிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என கருதிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

இந்த நிலையில் பிரகாசின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அளித்த அறிக்கையில், பிரகாசை சரமாரியாக வெட்டியதால் அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்து இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, உடலை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? அல்லது காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story