பருவமழை கைவிட்டதால் காய்ந்து கிடக்கும் கடைமடை ஏரிகள் விவசாயிகள் வேதனை


பருவமழை கைவிட்டதால் காய்ந்து கிடக்கும் கடைமடை ஏரிகள் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை கைவிட்டதால் கடைமடை பகுதியில் உள்ள ஏரிகள் காய்ந்து கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

காவிரி ஆற்றின் கடைமடை பகுதிகளில் ஒன்றான சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 ஆண்டுகளாக சரிவர பெய்யவில்லை. இங்கு ஏரிகளும், குளங்களும் வறண்டு கிடந்தன. கடந்த ஆண்டு (2018) மேட்டூர் அணை பல முறை நிரம்பியதால் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி, விவசாயத்துக்கு பலன் கிடைக்கும் என கடைமடை பகுதி விவசாயிகள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியை முழுமையாக வந்தடையவில்லை. இதன் காரணமாக கடைமடை பகுதியில் உள்ள ஏரிகள், வறண்டது வறண்டபடியே கிடக்கின்றன.

சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், கொரட்டூர், ஊமத்தநாடு, நாடியம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகள், ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசனம் தரக்கூடியவை. தற்போது இந்த ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையும் சரிவர பெய்யாமல், கடைமடையை கைவிட்டு விட்டது.

இதுபற்றி சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

30 ஆண்டுகளுக்கு மேலாக சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஒரு போக சம்பா நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. சம்பா, தாளடி, குறுவை என 3 போக நெல் சாகுபடிகளையும் இனி மேற்கொள்ளவே முடியாது என்ற நிலையில் தான் விவசாய தொழிலை நஷ்டத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி இருந்தபோதே இப்பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்பியிருக்க வேண்டும். கல்லணை கால்வாய் பாசன வாய்க்கால்களை பராமரிக்காமல் விட்டதால், ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் வாய்ப்பு நழுவி விட்டது. இனி வரும் நாட்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே இந்த ஆண்டும் ஏரிகள் வறண்ட நிலையிலேயே காட்சி அளிக்கும். சிறிய குளங்களும் கூட தண்ணீர் இல்லாமல் காணப்படுகின்றன. ஏரிப்பாசனம் என்பது இப்பகுதியில் எட்டா கனியாகி விடுமோ என்ற அச்சம் உள்ளது. கஜா புயலால் தென்னை விவசாயம் அழிவை சந்தித்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் நெல் விவசாயமும் கைவிட்டு போய் விட்டது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story