காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்


காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சிவகங்கை,

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கரூர் முருகேசன், ராமநாதபுரம் மதுரை வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநில நிர்வாகிகள் சோழந்தூர் பாலகிருஷ்ணன், முகவை மலைச்சாமி, விருதுநகர் ஜெயச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை முருகேசன், மானாமதுரை ராமமுருகன், பார்த்திபனூர் ராமு, தெ.புதுக்கோட்டை ராமு, ராமச்சந்திரன், திருச்சி பாரூக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இனிவரும் காலங்களில் காவிரி ஆற்றில் வீணாகி கடலுக்கு செல்லும் தண்ணீரைப் பயன்படுத்தி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தொடங்க வேண்டும். ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக ஆயக்கட்டு ஒரு போக சாகுபடிக்கு பாசனத்துக்கு தண்ணீர் உத்தரவாதம் செய்து அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

வைகை அணை இந்த ஆண்டு மூன்றுமுறை நிரம்பியும் விவசாயிகளுக்கு பயனில்லை. காலம் காலமாக பூர்வீக ஆயக்கட்டு பாசன வசதி பெற்று வந்த பல கண்மாய்கள் வறண்டு கிடக்கும் அவலம் நீடிக்கிறது. வைகை பூர்வீக பாசன விவசாயிகளைப் பாதுகாப்பதில் பொதுப்பணித்துறை முழுமையாக தோல்வி அடைந்து விட்டது.

எனவே வைகை அணை மற்றும் கால்வாய் கண்மாய் பாசனப் பகுதியை நிர்வாகம் செய்ய வைகை வடிநிலக் கோட்டம் என்று தனியாக பொதுப்பணித்துறை கட்டமைப்பு உருவாக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

வைகை அணையில் படிந்து கிடக்கும் சகதியை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி மாதம் 1–ந்தேதி முதல் 5–ந் தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடத்தவது என்றும் பிப்ரவரி மாதம் 8–ந்தேதி மதுரை பொதுப்பணித்துறை பெரியாறு தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story