பிளாஸ்டிக் தடைக்கு விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாளை, சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்


பிளாஸ்டிக் தடைக்கு விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாளை, சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:25 AM IST (Updated: 7 Jan 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வர்க்கீஸ், பொருளாளர் சந்திரதாசன், செய்தி தொடர்பாளர் இளையபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்பது விவரமாக இல்லை. ஆனால் கடைக்கு சோதனை செய்ய வரும் அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர். இதை கண்டித்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றினர்.

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறும் போது, ‘மளிகை கடைகளில் பொட்டலம் கட்டுவதற்கு வைக்கப்பட்டு உள்ள ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் ஆய்வுக்கு வரும் ஒரு சில அதிகாரிகள் தடை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது என்று கூறி பறிமுதல் செய்கின்றனர். மேலும் பணம் போட்டு வாங்கிய பொருட்களை பறிமுதல் செய்து அதை குப்பை வண்டியில் ஏற்றிச்செல்வதை கண்டிக்கிறோம்’ என்றார்கள்.

Next Story