சென்னை புறநகரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி துப்பாக்கிமுனையில் கைதுசொகுசு காரில் கூட்டாளிகளுடன் வந்தபோது சிக்கினார் + "||" + Chennai Popular rowdy Arrested at gunpoint
சென்னை புறநகரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி துப்பாக்கிமுனையில் கைதுசொகுசு காரில் கூட்டாளிகளுடன் வந்தபோது சிக்கினார்
சென்னை புறநகர் பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை, சொகுசு காரில் கூட்டாளிகளுடன் வந்தபோது துப்பாக்கிமுனையில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 34-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.
மாவட்ட நீதிமன்றம், நடுவர் நீதிமன்றங்களில் இவர் மீது 11 பிடிவாரண்டுகள் நிலுவையில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி சூர்யா, அதன்பிறகு சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்து வந்தார்.
இதையடுத்து ரவுடி சூர்யாவை பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி பீர்க்கன்காரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் சூர்யாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் முடிச்சூர் மதனபுரம் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு காரில் கூட்டாளிகளான ராஜசேகர்(24), முத்துக்குமார் (31) ஆகியோருடன் வந்த சூர்யாவை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து சூர்யா உள்பட 3 பேரையும் போலீசார் துப்பாக்கிமுனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சூர்யா உள்பட 3 பேருக்கும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான சூர்யாவிடம் இருந்து பீகார் மாநிலத்தில் வாங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டா, சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி சூர்யா, மீண்டும் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்து வந்ததும், தனது எதிரிகளான பிரபல ரவுடிகள் சீசிங் ராஜா, வினோத்குமார் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான சூர்யா உள்பட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.