குடிநீர் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 7 Jan 2019 7:25 PM GMT)

சின்னாம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது சின்னாம்பாளையம் பகுதி குடியிருப்போர் நகர் நலச்சங்க கூட்டமைப்பினர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சின்னாம்பாளையம் ஊராட்சிக்கு 3 கூட்டுக்குடிநீர் திட்டம் பயன்பாட்டில் இருந்தும் கடந்த சில மாதங்களாக குடிநீர் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை சுகாதாரமற்ற முறையில் உப்புநீர் கலந்து வருகின்றது. இதனால் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான நல்ல குடிநீர் வாரம் 2 முறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் மாதக்கணக்கில் சுத்தம் செய்யாமல் கிடக்கின்றது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி, கொசு மருந்து அடிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற வேண்டும்.

உடுமலை ரோடு 4 வழிச்சாலையில் இருபுறமும் பக்கவாட்டில் உள்ள தடுப்புகளை நீக்கி விபத்தை தடுக்க உதவ வேண்டும். புறநகர் பஸ்கள் அனைத்தும் சின்னாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்குதல், கேபிள், சமையல் எரிவாயு வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த மனுவில்,ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு வாரம் இருமுறை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் முருகன் லே-அவுட் பகுதியில் உள்ள கிணற்றை தூர்வாரி குப்பைகள், கழிவுநீர் கலக்காமல் இருக்க தடுப்பு சுவர் கட்டி, சீராக தண்ணீர் வழங்க வேண்டும். ஊராட்சி பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றவும், கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் வேண்டும். கோவை ரோடு வடக்கிபாளையம் பிரிவில் வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நெகமம் இறைச்சி கடை உரிமையாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெகமம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சந்தைபேட்டைக்கு செல்லும் வழியில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இறைச்சி கடைகளை நடத்தி வருகின்றோம். ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற இறைச்சி கடைகள் பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு, அவற்றை எடுத்து இறைச்சி விற்பனை செய்து வருகின்றோம். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கடைகள் ஏலம் விடவில்லை. வாய்மொழி உத்தரவுப்படி கடைகளை நடத்தி வந்தோம்.

இந்த நிலையில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து இறைச்சி கடை நடத்த கூடாது. அனைத்தையும் காலி செய்ய வேண்டும் என்றனர். மாட்டு இறைச்சி தொழிலை எங்களது வாழ்வாதாரமாக கொண்டு நடத்தி வருகின்றோம். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் கடைகள் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் அபு இக்பால் என்பவர் தலை மற்றும் உடலில் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடி நூதன முறையில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்த தமிழக அரசுக்கும், அதை பொள்ளாச்சி பகுதியில் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வரும் சப்-கலெக்டருக்கும் நன்றி தெரிவித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். 

Next Story