சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் மீண்டும் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி


சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் மீண்டும் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 7:29 PM GMT)

திருமருகல் அருகே சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

திருமருகல்,

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறா கிராமம் சாலையில் சாலையோரம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு குடிநீர் மூலம் புறாகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து கடந்த 10 நாட்களாக குடிநீர் வெளியேறி கொண்டிருந்தது. இதனால் சாலையில் குடிநீர் வீணாகி தேங்கி நின்றது. குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வந்ததால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து கடந்த மாதம் 30-ந்தேதி ‘தினத்தந்தி‘ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்தனர்.

இந்த நிலையில் குழாய் சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் மீண்டும் அதே இடத்தில் குழாய் உடைந்து அதிக அளவில் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் ஊருக்குள் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஏதோ சாக்கு போக்கு சொல்லி அலட்சியம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புறாகிராமம் சாலையில் மறியலில் ஈடுபட திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய துறையினரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள் விரைவில் சீரமைத்து தருவதாக உறுதியளித்தாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story