சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது


சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 7:35 PM GMT)

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு சாரங்கபாணி பெருமாளுடன், கோமளவல்லி தாயார் அருள்பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படும். பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக பொங்கல் தினத்தன்று தேரோட்டம் நடக்கும்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து நேற்று இரவு வெள்ளி இந்திர விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. வருகிற 16-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.

தேரோட்டத்தை தொடர்ந்து சக்கரத்தாழ்வார், சக்கரவர்த்தி திருமகன் பொற்றாமரை குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர். 

Next Story