வீட்டை சூறையாடிய 4 பேரை கைது செய்யாததால் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
வீட்டை சூறையாடிய 4 பேரை கைது செய்யாததால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஏராளமான மக்கள் மனுக்களை கொடுத்தனர். அவர்களை சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். அப்போது ஒரு பெண் சிறிய பையுடன் மனு கொடுக்க வந்தார். அதை பார்த்த போலீசார் சோதனை செய்வதற்காக அவரிடம் பையை கேட்டனர்.
ஆனால் பையை கொடுக்க மறுத்த அந்த பெண், அதில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்தார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார், அந்த பாட்டிலை பறிக்க முயன்றனர். அதற்குள் அந்த பெண் பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். எனினும் போலீசார் விரைவாக செயல்பட்டு அவரை தடுத்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வடமதுரை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த தங்கமணி மனைவி கனகலட்சுமி (வயது 56) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 4 பேர், எனது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுபற்றி போலீசில் புகார் அளித்த என்னையும், எனது மகனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக போலீசில் அவர் கூறினார். இதையடுத்து மனு கொடுக்க அவரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதேபோல் ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள தாதன்கோட்டையை சேர்ந்தவர் தண்டபாணி (66). இவரும் மனு கொடுக்க பையுடன் வந்தார். அவருடைய பையை போலீசார் சோதனை செய்த போது அதில் ஒரு பாட்டிலில் டீசல் இருந்தது. இதையடுத்து போலீசார், அதனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசாரிடம் அவர் கூறுகையில், குலதெய்வம் கோவில் கட்டுவதற்கு ஒதுக்கிய நிலத்தை ஒருவர் அபகரித்து கொண்டார். அதுபற்றி கேட்டபோது எனது மகன் மீது போலீசில் பொய் புகார் அளித்துள்ளார். இதனால் மனவேதனையில் தீக்குளிக்க டீசல் கொண்டு வந்தேன் என்று கூறி கதறி அழுதார். அவரை போலீசார் சமாதானம் செய்து மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story