பாடாலூரில் தனியார் பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்


பாடாலூரில் தனியார் பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 8:23 PM GMT)

பாடாலூரில் தனியார் பஸ்சை சிறைபிடித்து டிரைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி நேற்று மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு தனியார் பஸ்சில் ஏறி அமர்ந்தார். அப்போது அந்த பஸ்சின் டிரைவர் அந்த மாணவியிடம் எந்த ஊர் செல்லவேண்டும் எனக்கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவி பாடாலூர் செல்லவேண்டும் என கூறினார். அப்போது அவர் பாடாலூர் செல்பவர்கள் பஸ்சில் அமரக்கூடாது எனக்கூறி அந்த மாணவியை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து இறங்கினார். இதுகுறித்து அந்த மாணவி செல்போன் மூலம் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் பாடாலூரில் உள்ள ஊட்டத்தூர் பிரிவுச்சாலை பகுதியில் அந்த தனியார் பஸ்சை மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் சிறைபிடித்து டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சமாதானம் அடையவே பஸ்சை விடுவித்துவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டரிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story