அ.தி.மு.க. தோல்வியடையும் என்பதாலேயே இடைத்தேர்தல் ரத்து; தங்க தமிழ்ச்செல்வன் கருத்து


அ.தி.மு.க. தோல்வியடையும் என்பதாலேயே இடைத்தேர்தல் ரத்து; தங்க தமிழ்ச்செல்வன் கருத்து
x
தினத்தந்தி 7 Jan 2019 11:30 PM GMT (Updated: 7 Jan 2019 10:48 PM GMT)

திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடையும் என்பதாலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது எங்களை எல்லாம் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போதெல்லாம் வாய்திறக்காத அமைச்சர்கள் இப்போது வாய்திறக்க வேண்டிய அவசியம் என்ன?. அரசுத்துறை அதிகாரிகள், செயலாளர் அளவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தரம்தாழ்த்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. முதல்–அமைச்சரின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ள அமைச்சர்களும், மற்றவர்களும் இல்லை என்பது இந்த நடவடிக்கையின் மூலம் தெரியவருகிறது. இனியாவது இதை தலைமை புரிந்துகொண்டு பதவியை விட்டுவிலகுவது நல்லது.

இடைத்தேர்தல்கள் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலின் போதுதான் வரும். திருவாரூரில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தோல்வியை தழுவும் என்பதால் தான் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் தோல்வியைதான் தழுவும். எனவே, நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தினாலும் அவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள். இடைத்தேர்தலை ரத்து செய்து ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பதை போல் தேர்தல் கமி‌ஷன் அரசுக்கும், நீதிமன்றத்திற்கும், பா.ஜ.க.விற்கும் நல்ல பிள்ளையாகிறார்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நகர், கிராமப்புறம் என கோடிக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து போராடியதால் தான் வெற்றி கிடைத்தது. இதனால் அந்த கல்வெட்டில் கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் தான் இருக்கவேண்டுமே தவிர பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அங்கு வேலையில்லை. அதை தடுத்து பொதுமக்கள் போராடியதை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story