பட்டா மாறுதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக புகார்: லாரி டிரைவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி


பட்டா மாறுதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக புகார்: லாரி டிரைவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 7 Jan 2019 10:49 PM GMT (Updated: 7 Jan 2019 10:49 PM GMT)

பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல், 

மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். 

Next Story