வாலிபர் கொலையில் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
வாலிபர் கொலையில் சரண் அடைந்த பெண் உள்பட 5 பேரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை கோர்ட்டு அனுமதி வழங்கியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர் சென்னையில் வேலை செய்யும்போது இவருக்கும் நெசப்பாக்கத்தை சேர்ந்த மஞ்சுளா (37) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது மஞ்சுளாவின் கணவருக்கு தெரியவரவே கள்ளக்காதலை மஞ்சுளா முறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மஞ்சுளாவின் மகன் ரித்தேஷை (10) கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாகராஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி அன்று ஒரு மர்ம கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கள்ளக்காதலன் நாகராஜை கூலிப்படை மூலம் மஞ்சுளா கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி 5 பேரையும் போலீசார் திருவண்ணாமலை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் மஞ்சுளா சென்னை ஜெயிலிலும், மீதம் உள்ளவர்கள் வேலூர் ஜெயிலும்அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். நேற்று மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விக்னேஷ்பிரபு 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அழைத்துச்சென்றனர்.
Related Tags :
Next Story