காரிமங்கலம் அருகே விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்


காரிமங்கலம் அருகே விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:00 AM IST (Updated: 8 Jan 2019 8:18 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி விபத்தில் பலியானார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரிமங்கலம்,

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

காரிமங்கலம் ஒன்றியம் ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 24). கட்டிட தொழிலாளி.

இவருடைய நண்பர்கள் நந்தகுமார் (21), சபரிநாதன் (24). இவர்கள் இருவரும் டிரைவர்கள்.

இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கோவிந்தராஜ் ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.

பாலக்கோடு– காவேரிப்பட்டணம் சாலையில் எலுமிச்சனஅள்ளி பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். நந்தகுமார் மற்றும் சபரிநாதன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சபரிநாதனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் சம்பவ இடம் விரைந்து விபத்தில் இறந்த கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story