வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில், தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் ரெயில் மறியல் செய்ய முயன்ற 22 பேர் கைது


வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில், தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் ரெயில் மறியல் செய்ய முயன்ற 22 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 7:23 PM GMT)

வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். ரெயில் மறியல் செய்ய முயன்ற விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு ஊழியர்கள் நேற்று நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்திலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக அவர்கள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சேவியர், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், ஐ.என்.டி.யூ.சி. மோகன்ராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ. ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நீலமேகம் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் காந்திஜிசாலை, ரெயிலடி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும். போனஸ், பி.எப். உச்சவரம்பை நீக்க வேண்டும். பணிக்கொடை தொகையை அதிகப்படுத்த வேண்டும். பொதுத்துறையிலும், சில்லறை வணிகத்திலும் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் தஞ்சை ரெயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ரூ.400 ஊதியம் வழங்கவேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story