விழுப்புரம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 5 பேர் கைது
விழுப்புரம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் ஏரிக்கு கடந்த 30-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் மண் அள்ளுவதற்காக கெடாரை சேர்ந்த தொழிலாளர்களான கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், பிரகாஷ், ஏழுமலை, சுப்பிரமணி ஆகிய 5 பேர் தங்களது மாட்டு வண்டியில் சென்றனர்.
அப்போது ஏரியை நோக்கி வேகமாக வந்த காரை பார்த்ததும் போலீஸ் என்று நினைத்த தொழிலாளர்கள், மாட்டு வண்டிகளை முட்புதருக்குள் ஓட்டிச்சென்று மறைந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் திடீரென மாட்டு வண்டி தொழிலாளர்கள் இருந்த இடம்நோக்கி துப்பாக்கியால் 3 முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதில் மாட்டு வண்டி தொழிலாளி கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான ஒரு மாட்டின் வாய் பகுதியில் குண்டு பாய்ந்ததில் நாக்கு துண்டானது. மேலும் மாட்டு வண்டிகளில் குண்டு பாய்ந்து துளை ஏற்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், துப்பாக்கியால் சுட்டது சிறுவாலை கிராமத்தை சேர்ந்த சேகர் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனத்தில் ஒரு தனியார் பள்ளியின் பின்புறத்தில் பதுங்கி இருந்த புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை சேர்ந்த முருகேசன் மகன் திருநாவுக்கரசு என்கிற தங்கராஜ் (வயது 38), மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் அருள்பாண்டி (24), கார்த்திக் (26), விக்கிரவாண்டி தாலுகா மதுரப்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருள் (33), குருவிநத்தத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அன்பரசன்(28) ஆகிய 5 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
கடந்த 30-ந் தேதி அதிகாலையில் சேகர், திருநாவுக்கரசு உள்பட 11 பேர் முயல், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக 2 துப்பாக்கிகளுடன் ஒரு கார், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அதிகாலை 3.30 மணியளவில் வீரமூர் ஏரியில் முட்புதர் பகுதியில் மாட்டின் கண்கள் மிளிர்வதை பார்த்து காட்டுப்பன்றி என நினைத்து அருள்பாண்டி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் மாட்டின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. 3 முறை சுட்ட பிறகும் கண் அதே இடத்தில் இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு காரில் இருந்து கீழே இறங்கி அருகில் சென்று ‘டார்ச் லைட்’ அடித்து பார்த்தபோது, தாங்கள் சுட்டது பன்றி இல்லை, மாடு என்பதை அறிந்தனர்.
உடனே அவர்கள் 11 பேரும் காரிலும், மோட்டார் சைக்கிளிலும் ஏறி தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் தங்களது குற்றத்தை மறைப்பதற்காக திருநாவுக்கரசு, அருள் ஆகிய இருவரும் 31-ந் தேதி கேரள மாநிலத்திற்கு சென்று அங்குள்ள தனியார் ஆர்மரியில் (துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்கும் இடம்) முன்தேதியில் ஒப்படைத்ததுபோல் பொய்யான தோற்றத்தை உருவாக்கி தாங்கள் இந்த குற்றத்தை செய்யாததுபோல் தலைமறைவாக இருந்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திருநாவுக்கரசு, அருள்பாண்டி, அருள், கார்த்திக், அன்பரசன் ஆகியோர் மீது ஆயுதங்களை பயன்படுத்துதல், தடயத்தை மறைத்தல், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு துப்பாக்கி, கார் மற்றும் 94 காலி தோட்டாக்கள், 3 துப்பாக்கி குண்டுகள் (8 எம்.எம். வகையை சேர்ந்தது) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.
பின்னர் கைதான 5 பேரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சேகர், குரு, தேசிங்குராஜா, சரவணன், குமார், பரசுராமன் ஆகிய 6 பேரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story