சேரன்மாதேவி அருகே நெல்லை-செங்கோட்டை ரெயில் என்ஜின் திடீர் பழுது பயணிகள் அவதி


சேரன்மாதேவி அருகே நெல்லை-செங்கோட்டை ரெயில் என்ஜின் திடீர் பழுது பயணிகள் அவதி
x
தினத்தந்தி 8 Jan 2019 9:45 PM GMT (Updated: 8 Jan 2019 8:45 PM GMT)

சேரன்மாதேவி அருகே நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயிலில் என்ஜின் திடீரென பழுதடைந்தது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 6.25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பயணிகள் ரெயில் சேரன்மாதேவிக்கு 6.50 மணிக்கு செல்லும். செங்கோட்டைக்கு இரவு 8.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் செங்கோட்டையில் இருந்து மாலை 5.55 மணிக்கு ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு இரவு 8.10 மணிக்கு வந்தடையும்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.25 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரெயில் புறப்பட்டுச் சென்றது. சேரன்மாதேவி அருகே உள்ள ஆற்றுப்பாலத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ரெயில் என்ஜின் திடீரென பழுதடைந்து நின்றது. இதனால் என்ஜின் பழுதை டிரைவர் சரிசெய்ய முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுபற்றி உடனடியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே நெல்லையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரெயிலில் பொருத்தப்பட்டது. இதன்பிறகு அந்த ரெயில் இரவு 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 2 மணி நேரமாக ரெயில் காட்டுப்பகுதியில் பழுதடைந்து நின்றதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். மேலும் இந்த ரெயில் வருவதையொட்டி சேரன்மாதேவியில் உள்ள 2 ரெயில்வே கேட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில் என்ஜின் பழுது காரணமாக, செங்கோட்டையில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு வந்த பயணிகள் ரெயில், அம்பையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நெல்லை-செங்கோட்டை ரெயில் புறப்பட்டுச் சென்ற பிறகு, அந்த ரெயில் நெல்லையை நோக்கி புறப்பட்டு வந்தது. 2 ரெயில்களும் சுமார் 2 மணி நேரம் தாமதத்துக்கு உள்ளானதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Next Story