பொங்கல் பரிசு பொருட்களை பெற ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது


பொங்கல் பரிசு பொருட்களை பெற ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு பொருட்களை பெற ரேஷன்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 5 மணி நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

திண்டுக்கல், 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை, பச்சரிசி, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகிய பரிசு பொருட்களும், ரூ.1,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பொங்கல் பரிசு பொருட்கள், ரொக்கப்பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6 லட்சத்து 23 ஆயிரத்து 809 குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற் காக பரிசு பொருட்கள் பாக்கெட்டுகளாக தயாரிக்கப்பட்டு ரேஷன்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், நேற்று முன்தினம் பெரும்பாலான கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து நேற்று அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் வழங்கப்படாததால், நேற்று காலை 7 மணிக்கே ரேஷன்கடைகள் முன்பு மக்கள் குவியத் தொடங்கினர்.

திண்டுக்கல்லில் அனைத்து ரேஷன்கடைகளிலும் காலை 9 மணிக்கு, மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் வருகைக்காக, ஒருசில ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் தாமதமாக வழங்கப்பட்டன.

திண்டுக்கல் இந்திராநகர் ரேஷன்கடையில் மதியம் 12 மணிக்கு தான் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் 5 மணி நேரம் காத்திருந்து பொருட் களை வாங்கி சென்றனர். வீட்டில் சமையல் வேலைகளை கூட செய்ய முடியாமல் பெண்கள் சிரமப்பட்டனர். ரேஷன்கடைகளில் மக்களை காத்திருக்க வைக்காமல், பொருட்களை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

ஆனால், மதியம் வரை 5 மணி நேரம் காத்திருந்து மக்கள் பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். இந்த நிலை நீடித்தால் பொங்கலுக்கு முன்பு பொருட்கள் கிடைக் குமா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வழங்கல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story