கடன் தொல்லையால் பரிதாபம், அரளி விதைகளை தின்று பெண் தற்கொலை- கணவர் உயிர் ஊசல்


கடன் தொல்லையால் பரிதாபம், அரளி விதைகளை தின்று பெண் தற்கொலை- கணவர் உயிர் ஊசல்
x
தினத்தந்தி 9 Jan 2019 3:53 AM IST (Updated: 9 Jan 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் அரளி விதைகளை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கம்பம்,

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் வனராஜ் (வயது 50). தச்சுத்தொழிலாளி. அவருடைய மனைவி விஜயா (40). இந்த தம்பதிக்கு கீதா என்ற மகளும், கவுதம் (17) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீதாவுக்கு திருமணம் நடந்தது. அவர் தனது கணவருடன் கோவையில் வசித்து வருகிறார். கவுதம் பி.காம் படித்து வருகிறார்.

கீதாவின் திருமண செலவுக் காக வனராஜ், விஜயா ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த 6 பேரிடம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் வாங்கினர். இதற்காக அவர் கள் மாதம், வாரந்தோறும் வட்டி செலுத்தி வந்தனர். ஆனால் அந்த கடனை அவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் வட்டியும் அவர்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் அசல், வட்டி கேட்டு தொல்லை கொடுத்தனர். ஒரு சிலர் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டு அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கணவன்-மனைவி நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றனர்.

பின்னர் கம்பத்தில் கோம்பை சாலையில் உள்ள கன்னியம்மன் கோவில் ஓடை அருகே சென்ற அவர்கள், அங்கிருந்த அரளி செடிகளில் காய்களை பறித்து தின்றனர். இது குறித்து தனது மகன் கவுதமுக்கு, வனராஜ் செல்போனில் தகவல் தெரிவித்தார். சிறிதுநேரத்தில் 2 பேரும் மயங்கினர்.

இதற்கிடையே கவுதம், தனது உறவினர்களுடன் அங்கு விரைந்து சென்றார். பின்னர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயா பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வனராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விஜயா வைத்திருந்த பையில் இருந்து உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது:-

நாகஜோதி, பவளக்கொடி, அழகுராணி, சிங்கம், முருகேஸ்வரி, சாந்தா ஆகியோரிடம் மாத, வார வட்டிக்காக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறோம். இந்த கடன் தொல்லையால் தவறான வார்த்தைகள் பேசி அவமானப்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியே அனுப்பி கதவை அடைத்து வெளியே தள்ளி விட்டார்கள். இதனால் 3 நாட்கள் உறவினர்கள் வீட்டில் இருந்தோம்.

கடன் கொடுத்தவர்கள் அங்கேயும் வந்து எங்களை சத்தம் போட்டார்கள். இதனால் அவர்களும் வெளியே அனுப்பி விட்டனர். என் மகனை படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். கடன் தொல்லையால் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இவர்களுக்கு அசலுக்கு மேல் வட்டி செலுத்தி இருக்கிறோம்.

ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதம் ஆனாலும் சத்தம் போடுகிறார்கள். பணம் கொடு என்று கூறி நாகஜோதி என்பவர் எங்கள் வீட்டில் தங்கி சமைத்து சாப்பிடுகிறார். எங்களுக்கு எதுவானாலும் இவர்கள் தான் பொறுப்பு. எங்க மருமகன், மகளை தொந்தரவு செய்யக்கூடாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தில் வனராஜ், விஜயா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story