பொதுவேலை நிறுத்தம்: விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்த 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வேண்டும். குறைந்தபட்சம் ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று இந்த வேலை நிறுத்தம் தொடங்கிய நிலையில் இன்றும்(புதன்கிழமை) இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. போக்குவரத்து கழக பஸ்களும், தனியார் பஸ்களும் வழக்கம்போல் ஓடின. ஆட்டோக்களும் வழக்கம்போல் செயல்பட்டன. மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு, மாநில அரசு அலுவலம். வங்கிகள், கூட்டுறவுவங்கிகளில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் வேலைக்கு வந்திருந்தனர்.
எல்.ஐ.சி.யில் பணியாற்றுவோரில் 70 பேரும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் 200 பேரும், தபால் அலுவலகங்களில் பணியாற்றும் 430 பேரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் சில கிளை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. மின்வாரியத்தில் பணியாற்றும் 550 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். சத்துணவு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. கூட்டுறவு சங்க ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்தத்தையொட்டி விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. நிர்வாகி மாடசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சமுத்திரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம், நகர செயலாளர் காதர்மொய்தீன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க அமைப்பாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி அமைப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.