முன்விரோதம் காரணமாக பா.ஜ.க. தொண்டர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


முன்விரோதம் காரணமாக பா.ஜ.க. தொண்டர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 5:37 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக பா.ஜ.க. தொண்டர் வீட்டில் வெடிகுண்டு வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோழிக்கோடு, 

கோழிக்கோடு மாவட்டம் கொய்லாண்டி அருகே உள்ள வியூரை சேர்ந்தவர் கோபிநாதன். இவருடைய மகன் அதுல் (வயது 28). இவர் பா.ஜ.க. தொண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொய்லாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதுல் தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது இவருடைய வீட்டில் யாரோ மர்ம ஆசாமிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதில் அவருடைய வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அங்கு கிடந்த வெடிகுண்டு துகள்களையும் சோதனைக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story