நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட 640 பேர் கைது


நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட 640 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 640 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி, 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம் செய்வதை நிறுத்த வேண்டும், மத்திய-மாநில பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரியில் மின்வாரிய ஊழியர்கள் மொத்தம் 644 பேர் உள்ளனர். இதில் 390 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 181 தபால் அலுவலகங்கள் உள்ளன. தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா பெரிதும் பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 95 வங்கிகளில் அதிகாரிகள் வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தனர். ஆனால் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக ஒரு சில வங்கிகளை தவிர, பல வங்கிகளில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. தனியார் வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. வங்கிகளில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் மற்றும் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரியில் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், பச்சை தேயிலைக்கு ரூ.30 விலை வழங்க வேண்டும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்றக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் போஜராஜ், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் மூர்த்தி, எல்.பி.எப். செழியன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூரில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., பி.எல்.ஓ., ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் புதிய பஸ் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குஞ்சுமுகமது, அரவிந்தாக்‌ஷன், முருகன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், முகமது கனி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் முடிவை கைவிட வலியுறுத்தி மைசூரூ தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அங்கன்வாடி பணியாளர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 168 பேரை கைது செய்தனர்.

பந்தலூர் பஜாரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொடர்ந்து பந்தலூர் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு)வெற்றிவேல் ராஜன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்தனர். எருமாடு பஜாரில் நடந்த சாலை மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் சி.ஐ.டி.யு. வட்ட கிளை செயலாளர் சாமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அங்குள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கோத்தகிரி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 640 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story