தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலைகள், பிரதமர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா? சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு


தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலைகள், பிரதமர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா? சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:15 PM GMT (Updated: 9 Jan 2019 7:04 PM GMT)

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலைகள், பிரதமர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா? என வந்த தகவலால் சமூக ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில், ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில் இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் பாதுகாப்பு அறையில் ஐம்பொன் சிலைகள் இருந்தன.

இந்த கோவிலில் புனரமைப்பு பணி கடந்த 2005-ம் ஆண்டு நடந்தது. இதனால் கோவிலில் இருந்த 24 ஐம்பொன் சிலைகள் அங்கிருந்து எடுத்து வரப்பட்டு தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் உள்ள இந்திய தொல்லியல்துறை முதுநிலை உதவி பராமரிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

14 ஆண்டுகள் ஆகியும் இந்த சிலைகள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து தஞ்சை வந்த இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், முதுநிலை உதவி பராமரிப்பாளர் அலுவலகத்தில் இருந்த ஐம்பொன் சிலைகளை பார்த்ததாகவும், இவற்றில் 4 ஐம்பொன் சிலைகளின் கலைநயத்தை கண்டு வியப்படைந்த அவர்கள், அந்த 4 சிலைகளையும் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்து பரிந்துரைத்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து அந்த சிலைகள் ரசாயனங்களை கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் டெல்லிக்கு இந்த சிலைகள் எடுத்து செல்லப்பட உள்ளதாகவும் நேற்று தகவல் பரவியது.

இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தொல்லியல்துறை அலுவலகத்திற்கு வந்து சிலைகளை டெல்லிக்கு எடுத்து செல்லக்கூடாது. அந்த சிலைகளை மீண்டும் ஐராவதீஸ்வரர் கோவிலில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து தஞ்சை பெரியகோவில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சையில் உள்ள தொல்லியல்துறை அலுவலகத்திற்கு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள், ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 24 சிலைகள் இருப்பதை பார்த்து ஆய்வு மேற்கொண்டனர். இவற்றில் 4 சிலைகள் கலைநயத்துடன் இருந்ததால் அவற்றை டெல்லிக்கு கொண்டு சென்று பிரதமர் அலுவலகத்திலோ அல்லது தேசிய அருங்காட்சியகத்திலோ வைக்கலாம் என ஆலோசித்துள்ளனர்.

இதனால் அந்த சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இவை டெல்லிக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. 24 சிலைகளையும் ஐராவதீஸ்வரர் கோவிலில் உடனே ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். சிலைகளை காட்சி பொருளாக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

சிலைகளை ஒப்படைக்க உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை என்றால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தொல்லியல்துறை அதிகாரி கூறும்போது, ஐராவதீஸ்வரர் கோவில் சிலைகள், டெல்லிக்கு கொண்டு செல்ல எந்த திட்டமும் இல்லை. அப்படி எந்த அதிகாரியும் அறிவுறுத்தவும் இல்லை. சிலைகள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் உள்ளது என்றார்.

Next Story