2-வது நாளாக வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 1,171 பேர் கைது


2-வது நாளாக வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 1,171 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 3:30 AM IST (Updated: 10 Jan 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 1,171 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் நேற்று முன்தினம் வேலை நிறுத்தம் தொடங்கியது.

நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப்., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன.

தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முன்பு நேற்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் தர்மன், மோகன், காசி விசுவநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மகாவிஷ்ணு, சுடலைராஜ், சடையப்பன், பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன் மூலம் நெல்லை உடையார்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு., ஏ.ஐ.ஆர்.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி கோட்ட தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். அய்யப்பன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாளையங்கோட்டை வணிகவரித்துறை இணை ஆணையாளர் அலுவலகம் முன்பு வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி, அம்பை, வள்ளியூர், வீரவநல்லூர், ஆய்க்குடி ஆகிய 7 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 1,171 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story