பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கியது


பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தஞ்சாவூர், சென்னை, திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில் மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இதனால் பண்டிகை காலங்களில் மட்டும் நெரிசலை தவிர்க்க தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். அந்த வகையில் மன்னார்புரத்தில் 2 இடங்களிலும், சோனா மீனா தியேட்டர் அருகே ஒரு இடத்திலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும் சேர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கலை கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு வசதியாக வருகிற 14-ந்தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தொடர் விடுமுறையாகும். இதனால் பொதுமக்கள் பலர் முன்கூட்டியே தங்களது சொந்த ஊருக்கு செல்வது உண்டு. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மன்னார்புரம் ரவுண்டானா அருகே மதுரை அணுகுசாலையிலும், கல்லுக்குழி செல்லக்கூடிய பாதையிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட உள்ளது. இதற்காக அங்கு பந்தல் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மேலும் நடமாடும் கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதேபோல சோனா-மீனா தியேட்டர் அருகேயும் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

3 இடங்களிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நாளை (வெள்ளிக் கிழமை) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் மதுரை, தூத்துக்குடி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மன்னார்புரத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையிலும், புதுக்கோட்டை, ராமேசுவரம் மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானா அருகே கல்லுக்குழி செல்லும் பாதையில் இருந்தும், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் சோனா மீனா தியேட்டர் அருகே இருந்தும் இயக்கப்பட உள்ளது. திண்டுக்கல், கோவை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும். 

Next Story