தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்
தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கிராம சபை கூட்டத்திற்கு குன்றத்தூர் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மலர்விழி தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான தா.மோ.அன்பரசன், குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் படப்பை மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, பஸ் வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மனுக்களை கொடுத்தனர்.
இதில் ஒரகடம் சிலம்புச்செல்வன், ஆதனூர் கிளை நிர்வாகிகள், இளைஞர்கள் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல செங்கல்பட்டு தொகுதியில் உள்ள வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், ஊனமாஞ்சேரி ஆகிய ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.கே.தண்டபாணி, ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழச்சேரி, கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தி.மு.க. கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அவைத்தலைவர்கள் மணி, ஆசீர்வாதம், சோலைசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்திற்கு வந்திருந்த திரளான பெண்கள், பொதுமக்கள் சாலைவசதி, குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரவேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டித்தரவேண்டும், சுடுகாட்டு பாதை ஏற்படுத்தி தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணிகள் செய்யப்படும் என்று எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.