2-வது நாளாக வேலைநிறுத்தம்: திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியல் பெண்கள் உள்பட 610 பேர் கைது


2-வது நாளாக வேலைநிறுத்தம்: திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியல் பெண்கள் உள்பட 610 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 2-வது நாளாக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ரெயில் மறியலில் ஈடுபட்ட 610 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

திருச்சியில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. 2-வது நாளாக வங்கி ஊழியர்களும், தபால் துறை ஊழியர்களும் பணிக்கு செல்லவில்லை. இதனால் வங்கிகளில் மேலும் ரூ.400 கோடி பண பரிவர்த்தனை பாதிப்படைந்தது. தபால்துறை அலுவலகங்களில் தபால்கள் மேலும் தேக்கமடைந்தன.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் தபால்கள் மலைபோல குவிந்து கிடந்தன. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய ரவுண்டானா அருகே நேற்று காலை 10 மணிக்கு மேல் தொழிற்சங்கத்தினர் குவிய தொடங்கினர்.

ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுதவிர ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முடியாதபடி ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அருகே இரும்பு தடுப்புகள் அமைத்திருந்தனர். மேலும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் கயிறு கட்டியிருந்தனர்.

இந்த நிலையில் ஜங்ஷன் ரவுண்டானாவில் இருந்து தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக கையில் கொடிகளுடன் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அருகே தொழிற்சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரெயிலை மறிக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கூறினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், தொழிற்சங்க முக்கிய நிர்வாகிகளும், அவர்களுடன் ஒருசிலர் மட்டும் உள்ளே செல்லலாம் எனவும், மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை, என்றார்.

இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளும், அவர்களுடன் சிலரும் கையில் கொடிகளுடன் ரெயில்நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது சிறிது தூரத்தில் முன்பதிவில்லா டிக்கெட் மையம் அருகே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொழிற்சங்கத்தினர் தடுப்புகளை தூக்கியும், அதனை தாண்டியும் செல்ல முயன்றனர். இதனால் அந்த இடமே களேபரமானது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன், போராட்டக்காரர்களை உள்ளே அனுமதிக்க முடியாது, என்றார். அப்போது மற்றொரு அதிகாரி, தொழிற்சங்கத்தினரை அனுமதிக்கலாம், என்றார்.

இதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட போராட்டக்காரர்கள் முதலாவது நடைமேடை நோக்கி ஓடிச்சென்றனர். அந்த நேரத்தில் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முதலாவது நடைமேடையில் நின்றது.

அந்த ரெயிலின் என்ஜினை மறித்து போராட்டம் நடத்துவதற்காக அங்குமிங்கும் கோஷமிட்டப்படி ஓடினர். ரெயிலின் கடைசிப்பெட்டிக்கு ஒரு பகுதியினரும், என்ஜின் முன்பக்கம் மற்றொரு பகுதியினரும் சென்று தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ரெயிலின் கடைசி பெட்டி பக்கம் சென்றவர்கள் முன்பக்கம் வந்து கலந்து கொண்டனர். தொழிற்சங்கத்தினர் சிறிது நேரம் கோஷமிட்டனர். பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் 65 பெண்கள் உள்பட மொத்தம் 610 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அரசு பஸ் மற்றும் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டதால் ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் தாமதமாக காலை 11.30 மணிக்கு மயிலாடுதுறை புறப்பட்டு சென்றது.

இன்று பணிக்கு திரும்புகின்றனர்

தொழிற்சங்கத்தினரின் 2 நாள் வேலைநிறுத்தம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை வழக்கம் போல பணிக்கு திரும்புகின்றனர்.

Next Story