மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2019 4:45 AM IST (Updated: 10 Jan 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்பெல்லாம் பணம் கொடுப்பது கிடையாது. பொருட்கள் மட்டும் கொடுப்பார்கள். ஆனால் தற்போது பல மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் ஒகி புயலால் பாதிக்கப்பட்டது. இப்படி பலவிதமான பாதிப்புகளுக்கு மக்கள் ஆளானதால், சாதாரண ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவித கொண்டாட்டங்களும் இல்லாமல் போய்விடக்கூடாது. வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பை மறக்க வைக்கக்கூடிய வகையில் இந்த பொங்கல் விழாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் கருதியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

அப்படி ஒரு சிந்தனை அவரிடம் இருக்கும்போது, அதை நான் குறைசொல்ல மாட்டேன். ஆனால் ஐகோர்ட்டு ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது. அதன் முழு விவரம் எனக்குத் தெரியவில்லை. எனவே நான் அதைப்பற்றி கருத்துச் சொல்லவிரும்பவில்லை.

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் முழு விவரத்தை தெரிந்து கொண்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. 69 சதவீத இடஒதுக்கீடு அப்படியே இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போது பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கக்கூடிய ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதம்.

இது நீண்டகாலமாக எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் நரேந்திரமோடியால் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் சாதி, மதம் எதுவும் கிடையாது. இதை சிலர் எதிர்க்கிறார்கள். தேர்தல் காரணமாக அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்.

தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக வைகோ கூறியுள்ளார். தமிழகத்தை வஞ்சிப்பது யார்? யாருக்கு கருப்புக்கொடி காட்டப்போகிறார்கள்? தற்போது டெல்லியில் இருப்பதைப்போல மிகப்பெரிய மருத்துவமனையை தமிழகத்துக்கு அவர் கொடுத்துள்ளார். அதற்கு அடிக்கல் நாட்ட வருகைதரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக கூறுகிறார்கள்.

இப்படி சொல்லக்கூடியவர்கள் கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்துக்கு ஏதாவது செய்துள்ளார்களா? யாரை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்ற யோசனை வேண்டாமா? வைகோவைப் பற்றி நான் அதிகமாக பேசவிரும்பவில்லை. அவர் இந்த போராட்டத்தை கைவிடுவது தமிழர்களின் கவுரவத்தை காப்பாற்றும்.

நான் கூட்டணிக்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசவில்லை. குமரி மாவட்டத்துக்கு இன்னும் 3 மேம்பாலங்கள் தேவைப்படுகிறது. அது தொடர்பாக அவரை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக நாகர்கோவில் கோணத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறைகளை பொன்.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், கேந்திர வித்யாலயா துணை இயக்குனர் மணி, பள்ளி முதல்வர் செந்தில்குமார், நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், வக்கீல் மரியஸ்டீபன் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், மாணவ- மாணவிகள், அவர்களுடைய பெற்றோர் கலந்து கொண்டனர்.

Next Story