பல்வேறு வசதிகள் கொண்ட சொகுசு வேனில் நாடுகளை சுற்றும் பிரான்ஸ் தம்பதி ராமேசுவரம் வந்தனர்
பல்வேறு வசதிகளை கொண்ட சொகுசு வேனில் நாடுகளை சுற்றும் பிரான்ஸ் நாட்டு தம்பதி நேற்று ராமேசுவரம் வந்தனர்.
ராமேசுவரம்,
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 76). அவருடைய மனைவி ஜெசி(75). இந்த தம்பதி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டில் இருந்து பல்வேறு வசதிகளுடன் கூடிய சொகுசு வேனில் சுற்றுலா புறப்பட்டனர். பிரான்சில் இருந்து புறப்பட்டு இத்தாலி, ரஷியா, துருக்கி, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சுற்றியபடி இந்தியா வந்தனர்.
நமது நாட்டிலும் பல மாநிலங்களில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு அந்த வேனில் பயணம் மேற்கொண்ட அவர்கள் நேற்று புண்ணியதலமான ராமேசுவரம் வந்தனர்.
அந்த தம்பதியின் சுற்றுப்பயணத்தைவிட அவர்கள் வந்த வேனில் இருந்த சிறப்பு வசதிகள் எல்லோரையும் கவர்ந்து இருந்தது. அதாவது, வீட்டில் உள்ள வசதிகள் அத்தனையையும் அவர்கள் அந்த வேனில் ஏற்படுத்தி இருந்தனர். டைனிங் டேபிள், சமையல் செய்யும் பகுதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் அதில் இருந்தன. அந்த வேன் முன்பு நின்று சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதுபற்றி வெளிநாட்டு தம்பதி கூறும்போது, உலக நாடுகளை வாகனத்திலேயே சாலை வழியாக சென்று சுற்றி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இதற்காக பிரான்சில் இருந்து வேனில் புறப்பட்டோம். பல நாடுகளை சுற்றிய பின்பு இந்தியா வந்தோம். மற்ற நாடுகளை விட இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கைமுறை, கலாசாரம் வித்தியாசமாக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற வாழ்க்கை முறையை பார்த்ததில்லை. இந்தியாவில் அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறியும் வாகனம் ஓட்டுவதை பார்த்தால் பயமாக உள்ளது. ராமேசுவரத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து சுற்றிபார்த்து விட்டு புதுச்சேரி, சென்னை செல்ல உள்ளோம். சாலை மார்க்கமாகவே சென்று இன்னும் 10 மாதத்தில் மேலும் பல நாடுகளை சுற்றி பார்க்க இருக்கிறோம்“ என்றனர்.