நன்னடத்தை சான்றிதழ் இணையதளத்தில் பெறும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்


நன்னடத்தை சான்றிதழ் இணையதளத்தில் பெறும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

நன்னடத்தை சான்றிதழ் இணையதளத்தில் பெறும் வசதியை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

போலீஸ் துறை சார்பில் தனிநபர் விவரம், வேலை நிமித்தமான விவரம், வாடகை தாரரின் விவரம், வீட்டு வேலை ஆட்களின் விவரம்ஆகியவற்றை சரி பார்ப்பதற்கான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்துவதற்கு விண்ணப்பிக்கும் தனிநபர் ரூ.500–ம், தனியார் நிறுவனங்கள் ரூ.1000–ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சேவையின் முக்கிய நோக்கம் தனிநபர் ஒருவரின் வீட்டு முகவரி மற்றும் அவர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா? என்ற விவரம் சரி பார்த்து விண்ணப்பித்தவருக்கோ அல்லது விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கோ தெரியபடுத்தப்படும்.

விண்ணப்பம் செய்த 15 நாட்களுக்குள் இந்த சரி பார்ப்பு பணி முடிக்கப்படும். இந்த சரிபார்ப்பு சேவையை பயன்படுத்த பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டியது இல்லை. பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் இணையதள வழியாக விண்ணப்பித்து அதற்கான நன்னடத்தை சான்றிதழை இணையதளம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த சான்றிதழில் கியூ.ஆர்.கோடு இருக்கும். இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் ஸ்கேன் செய்து காவல்துறையின் மூலம் வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் தானா என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேற்று தொடங்கி வைத்து பரமக்குடி தாலுகா எட்டிவயல் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு இணையதளம் மூலம் நன்னடத்தை சான்றிதழை வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது, காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் அலைந்து திரிந்து விசாரணை சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஆண்டு 2,920 பேருக்கு அவர்களது நடத்தை பற்றி விசாரித்து நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story