விழுப்புரம் அருகே ரூ.12 லட்சம் ரேஷன் அரிசியை மாவாக்கி லாரியில் கடத்த முயற்சி


விழுப்புரம் அருகே ரூ.12 லட்சம் ரேஷன் அரிசியை மாவாக்கி லாரியில் கடத்த முயற்சி
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 10 Jan 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியை மாவாக்கி லாரியில் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த பூத்தமேட்டில் உள்ள ஒரு காட்டன் மில் குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார், பூத்தமேட்டுக்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் அந்த காட்டன் மில் குடோனுக்கு சென்று அங்கிருந்த லாரியில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அவருடன் மேலும் 3 பேர் அந்த லாரியில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று 4 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த லாரியை சோதனை செய்ததில் அந்த லாரியினுள் 50 கிலோ எடை கொண்ட 450 மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்ததில் 430 மூட்டைகளில் ரேஷன் அரிசியுடன் தவிடு, நொய், குருணை ஆகியவற்றை கலந்து அரவை மில்லில் கொடுத்து மாவாக அரைத்து வைத்திருந்ததும், மீதமுள்ள 20 மூட்டைகளில் சுத்தமான ரேஷன் அரிசியும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த சையத்அபுதாகீர் (வயது 28), விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த முகமதுஜான்சேட் (48), விழுப்புரம் அருகே தென்னமாதேவி காலனியை சேர்ந்த மணிபாலன் (46), திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த பரசுராமன் (54) என்பது தெரிந்தது.

மேலும் விசாரணையில் இவர்கள் 4 பேரும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி அவற்றுடன் தவிடு, நொய், குருணை ஆகியவற்றை கலந்து அரவை மில் மூலம் மாவாக்கி கோழி தீவனத்திற்காக நாமக்கல், ராசிபுரத்தில் உள்ள பண்ணைகளுக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சையத்அபுதாகீர் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள அரிசி மாவு மூட்டைகள், சுத்தமான ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள லாரி மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான 4 பேரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story