திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: சாலை மறியலில் ஈடுபட்ட 1,120 பேர் கைது - அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு


திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: சாலை மறியலில் ஈடுபட்ட 1,120 பேர் கைது - அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 11:37 PM GMT (Updated: 9 Jan 2019 11:37 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சாலை மறியலில் ஈடுபட்ட 1,120 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

திருப்பூர்,

நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கல்வி மற்றும் மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சியினர், தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்கள் சார்பில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முன்தினம் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. முதல் நாள் போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.700 கோடிக்கு வங்கிகளில் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து தொழிற்சங்கங்களில் அறிவிப்பு படி நேற்றும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஒருசில கடைகள் மூடப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தை சேர்ந்தவர்களின் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. ஒருசில பஸ்களை தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. தொழில் நிறுவனங்களும் வழக்கம் போல செயல்பட்டதால், தொழிலாளர்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர். முழு அடைப்பு போராட்டத்தால் முதல் நாள் போல, நேற்றும் திருப்பூர் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., திருப்பூர் மாவட்ட இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் ரெயில் நிலையம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனால் அங்கு நேற்று காலையில் இருந்தே ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்தில் நுழைந்து விடாமல் இருப்பதற்காக இரும்பு தடுப்புகளை வைத்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் வாசலை அடைத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நேற்று காலையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு கூடினார்கள். பின்னர் கையில் கட்சி கொடிகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்ற அவர்கள், ரெயில் நிலையம் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் விரோத போக்கை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதுபோல அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் ஏராளமானோர் கொடிகளை பிடித்தபடி ரெயில் நிலையம் முன்பு கூடினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையம் அருகில் உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

இதன்படி மொத்தம் 120 பெண்கள் உள்பட 540 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதுபோல அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், தொழிற்சங்கத்தினரும், அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 400 பெண்கள் உள்பட 1,120 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்ததை தொடர்ந்து அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சங்கம் சாராத ஊழியர்கள் மட்டுமே அரசு அலுவலகங்களுக்கு வந்து தங்கள் பணிகளை கவனித்து கொண்டனர். பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த அலுவலகங்களில் சான்றிதழ்கள், உதவித்தொகைக்காக வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story