பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் - நாளை முதல் இயக்கப்படுகிறது


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் - நாளை முதல் இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 10 Jan 2019 5:56 AM IST (Updated: 10 Jan 2019 5:56 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர்,

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15-ந்தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்காக திருப்பூரில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக வருகிற 14-ந்தேதி முதல் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்தே தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக திருப்பூரில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பயணிகளில் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக திருப்பூர் துணை மேலாளர்(வணிகம்) முத்துகிருஷ்ணன் கூறியதாவது:-

திருப்பூரில் உள்ள தொழிலாளர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேனி, திருநெல்வேலி, மதுரை, செங்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பொங்கல் பண்டிகைக்காக நீண்ட நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகமான, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வார்கள். இதை கருத்தில் கொண்டு திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து 150 பஸ்களும், புதிய பஸ்நிலையத்தில் இருந்து 350 பஸ்களும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல்15-ந்தேதி வரை பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளன.

ஆனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பஸ்களின் எண்ணிக்கையையும், முன்பதிவு டிக்கெட் கொடுக்கும் மையங்களையும் அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஆன்லைனிலும் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 15 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பஸ் நிலையங்களில் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். இவர்கள் பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பதுடன், பஸ்கள் செல்லும் நேரம், திரும்பி வரும் நேரம் உள்ளிட்டவற்றையும் கண்காணிப்பார்கள். இதைத்தொடர்ந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் திரும்ப வசதியாகவும் 20-ந்தேதியில் இருந்து மீண்டும் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story