ஹைட்ரோகார்பன் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


ஹைட்ரோகார்பன் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2019 4:45 AM IST (Updated: 10 Jan 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோகார்பன் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

சுந்தரக்கோட்டை,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை அழித்து விட்டு ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுப்பதற்கு மத்திய அரசு சதி திட்டத்தை அரங்கேற்றி வருகிறது. இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அரசு மதிப்பளிக்க மறுக்கிறது. தூத்துக்குடி மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் வேதாந்தா நிறுவனம் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் பகுதியை மையமாக வைத்து வேதாரண்யம், கரியாபட்டினம் வரை சுமார் 240 சதுர கிலோ மீட்டரில் விளை நிலங்களை அபகரித்து மக்களை வெளியேற்றி விட்டு எரிவாயு கிணறுகள் அமைக்க ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.


இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் வரையிலும் பேரழிவு ஏற்படும். வேதாந்தா நிறுவனம் பூமிக்கடியில் ஹைட்ரோகார்பன் மட்டுமின்றி இயற்கை எரிவாயு, மீத்தேன், பாறை எரிவாயு, கச்சா உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் எடுத்து கொள்ளலாம் எனவும் வணிக நோக்கில் தன் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ளும் வகையில் தொகுப்பு அடிப்படையிலான ஒற்றை சாளர முறையில் மார்ச் 12–க்குள் விண்ணப்பிக்கும் வகையில் ஏல அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மகாத்மா காந்தியடிகள் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை பறித்து விட்டு மீண்டும் ஆங்கிலேயரிடத்தில் அடிமைப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும், இத்திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தியும் வருகிற 26–ந்தேதி குடியரசு தினத்தன்று திருக்காரவாசலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story