குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது


குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jan 2019 10:30 PM GMT (Updated: 10 Jan 2019 8:34 PM GMT)

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வரும் 21-ந் தேதி நடக்கிறது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் இருந்து சாமிகள் புறப்பாடாகி குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரிக்கரையில் ஒன்றுகூடும். அதன்பின்னர் அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டு திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், வருகிற 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ள தைப்பூச விழாவில் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ராஜேந்திரம், அய்யர்மலை, கருப்பத்தூர், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருஈங்கோய்மலை, முசிறி, வெள்ளூர், பெட்டவாய்த்தலை ஆகிய ஊர்களில் இருந்து சாமிகள் புறப்பட்டு வந்து வருகிற 21 -ந் தேதி மாலை குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் அருகே சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குளித்தலை கடம்பவனேஸ் வரர் சாமியுடன் கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு சென்று அன்று மாலை 6 மணிக்குள் தீர்த்தவாரியை நடத்துவது. வருகிற 22-ந் தேதி சாமிகளின் சந்திப்பு தீபாராதனை காவிரி ஆற்றுப்பகுதியில் நடத்தப்பட்டு விடையாற்றி உற்சவவிழா நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.

2 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் குளித்தலை தாசில்தார் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் சையத் முஸ்தபாகமால், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அனைத்து துறைகள் சார்ந்த அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story